Ticker

6/recent/ticker-posts

Theri movie review in tamil

’ராஜா ராணி’ என்ற மிகப் பெரிய வெற்றிப் படத்துடன் அறிமுகமான இளம் இயக்குனர் அட்லி, தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை விஜய்யுடன் இணைந்திருக்கும் படம் ‘தெறி’. கலைப்புலி.எஸ்.தாணு பிரம்மாண்டமாகத் தயாரித்து மிகப் பிரம்மாண்டமாக வெளியிட்டிருக்கும் இந்தப் படத்தில். சமந்தா, ஏமி ஜாக்ஸன் நாயகிகள், இயக்குனர் மகேந்திரன் வில்லனாக நடித்திருக்கிறார், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு இது 50ஆவது படம் என பல காரணங்களுக்காக விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுவான ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘தெறி’ படத்தின் விமர்சனத்தைப் பார்ப்போம்.
நேர்மையும் வீரமும் மிக்க காவல்துறை அதிகாரி விஜயகுமார் ஐபிஎஸ். ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவு கொண்டு கொலை செய்தவனைக் கொன்றுவிடுகிறார். கொல்லப்பட்டவன் அமைச்சர் வானமாமலையின் (மகேந்திரன்) மகன். அமைச்சரால் பழிவாங்கப்பட்டு அம்மாவையும் மனைவியையும் இழந்து கேரளா கிராமத்தில் மகள் நிவியின் பாதுகாப்புக்காக ஜோசஃப் குருவில்லா என்ற புது அடையாளத்துடன் வசிக்கிறார். மீண்டும் வானமாமலை அவரது வாழ்வில் குறுக்கிட அதை எப்படி முறிக்கிறார் என்பதே மீதிக் கதை.
திரைப்படங்களில் புதிய கதைகளைச் சொல்வது ஒருவகை. பழைய கதையை புதுமையாகச் சொல்வது ஒரு வகை. இரண்டாவது வகையைத் தேர்ந்தெடுத்திருக்கும் இயக்குனர் அட்லி, தெரிந்த கதையில் புதிய காட்சி அமைப்புகளையும் ரசிக்கத்தக்க அம்சங்களையும் புகுத்தி படத்தை ரசிக்க வைப்பதில் பெருமளவில் வெற்றிபெறுகிறார்.
சாதாரண பழிவாங்கல் கதைதான் என்றாலும் அதில் குடும்ப உறவுகளின் மேன்மை, பெண்கள் பாதுகாப்பு, தினமும் ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் அவல நிலை, குழந்தைகளை நல்ல மனிதர்களாக வளர்ப்பதில் பெற்றோருக்கு குறிப்பாக தந்தையருக்கு உள்ள பங்கு உள்ளிட்ட சமூக அக்கறை சார்ந்த விஷயங்களை அழகாகவும் அழுத்தமாகவும் பொருத்தி முத்திரை பதிக்கிறார் அட்லி.
இவை எல்லாவற்றிற்கும் அவரது அழுத்தமான, சில இடங்களில் நெகிழவைக்கும் வசனங்கள் மிகக் கச்சிதமாகத் துணைபுரிகின்றன. சம காலத்தில் மிகச் சிறந்த வசனகர்த்தாக்களில் ஒருவராக அட்லியை அடையாளப்படுத்தலாம்.
தவிர விஜய்யை, அவரது மாஸ் ஹீரோ பிம்பத்தை சரியாகப் பயன்படுத்தியிருப்பதோடு, அவரிடம் இதுவரை வெளிப்படாத புதிய விஷயங்களையும் அழகாக வெளிக்கொண்டுவந்திருக்கிறார். குறிப்பாக காதல் காட்சிகளிலும் எமோஷனல் காட்சிகளிலும் முந்தைய படங்களைக் காட்டிலும் அழகாகச் மனதுக்கு நெருக்கமாகச் செய்திருக்கிறார். விஜய். காவல்துறை அதிகாரியாக வரும் காட்சிகளில் அதிக மிடுக்குடன் தெரிவதோடு மாஸ் காட்சிகளிலும் சிறப்பான விருந்துபடைத்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் வழக்கம்போல் வெளுத்துவாங்கியிருக்கிறார். புதுமையான உடல்மொழியைக் கொண்டுவந்திருக்கிறார். மொத்தத்தில் விஜய்யின் பெர்ஃபாமன்ஸ் வேறொரு தளத்துக்கு சென்றிருக்கிறது.
விஜய்யுன் காதலியாக மருத்துவர் மித்ராவாக வரும் சமந்தா அழகாக இருப்பதோடு நடிப்பதற்கான வாய்ப்பையும் நன்கு பயன்படுத்தியிருக்கிறார். சொந்தக் குரலில் வசனம் பேசியிருக்கும் விதமும் பாராட்டுக்குரியது. ஆனால் எமோஷனல் காட்சிகளில் எதெற்கெடுத்தாலும் கண்ணீர் சிந்துவதைத்தான் பொருத்துக்கொள்ள முடியவில்லை.
விஜய்யின் அம்மாவாக ராதிகா மிகச் சில காட்சிகளில் வந்தாலும் மனதில் நிற்கிறார். கேலியும் கிண்டலும் அடிநாதத்தில் இழைந்தோடும் அன்பும் நிறைந்த அம்மா-மகன் உறவு மிகச் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கிறது.
வில்லனாக நடித்திருக்கும் மகேந்திரன் முதல் பாதியில் இரண்டே இரண்டு காட்சிகள்தான் வருகிறார் என்றாலும் ஒரு அரசியல்வாதியின் தோரணையைக் கச்சிதமாகக் கொண்டுவருகிறார் உடல்மொழியும் வசன உச்சரிப்பும் மிரட்டலாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் வருக் காட்சிகளிலும் அதே தன்மையை தக்கவைத்திருக்கிறார். இருப்பினும் இந்த வில்லன் வேடத்துக்கு மகேந்திரன் போன்ற ஒருவரை ஏன் நடிக்க வைக்க வேண்டும் என்பதற்கான காரணம் சரியாக வெளிப்படவில்லை.
விஜய்யின் மகளாக வரும் அறிமுக குழந்தை நட்சத்திரம் பேபி நைனிகா அவரது அம்மா மீனாவின் சிறுவயது தோற்றத்தை நினைவுபடுத்துகிறார். முக பாவங்களில் மனதைக் கொள்ளைகொள்கிறார். அவருக்கு பின்னணிக் குரல் கொடுத்திருக்கும் உத்ரா உன்னி கிருஷ்ணனும் சிறப்புப் பாராட்டுக்குரியவர்.
ஏமி ஜாக்சனுக்கு பெரிய அளவில் வேலை இல்லை என்றாலும் கண்ணியமான டீச்சராக மனதில் நிற்கிறார். சில காட்சிகளில் வசனங்களுக்கான அவரது உதட்டசைவு பொருந்தவில்லை. .
ஜிவி பிரகாஷின் பின்னணி இசை காட்சிகளுடன் சரியாகப் பொருந்துகின்றன. சண்டைக் காட்சிகளில் வரும் தீம் இசை தாளம் போடவைக்கிறது. பாடல்கள் கேட்கும்படியும் அவற்றின் படமாக்கம் ரசிக்கும்படியும் இருக்கின்றன. விஜய்யின் அபார நடனத் திறமைக்கு இன்னும் கொஞ்சம் தீனி போட்டிருக்கலாமோ என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு கேரளத்தின் நிதானமான அழகையும் சென்னையின் பரபரப்பையும் அள்ளித் தெளிக்கிறது. கலை இயக்குனர் முத்துராஜின் கைவண்ணத்தில் காவல்துறை என அனைத்தும் அசலாக இருக்கின்றன. படத்தில் விஜய்யின் வீடு அழகாகவும் பிரம்மாண்டமாகவும் உள்ளது. அந்தோணி ரூபனின் படத்தொகுப்பு படத்தின் நீளத்தைக் குறைக்க உதவியிருக்கலாம்.
ஒரு படத்தை முதல் பாதி இரண்டாம் பாதி என்று பிரித்து விமர்சிப்பதை திரைப்பட வல்லுனர்கள் ஏற்பதில்லை. ஆனால் பெரும்பாலான படங்கள் அப்படிச் செய்வதற்கான நிர்பந்ததை ஏற்படுத்திவிடுகின்றன. காட்சிகளைப் புதுமையாக அமைக்கும் அட்லியின் திறன் முதல் பாதி அளவுக்கு இரண்டாம் பாதியில் கைகொடுக்கவில்லை. அடுத்து என்ன நடக்கும் என்று ஊகிக்க முடிந்தாலும் சம்பவங்கள் நடக்கும் விதத்தில் முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாதியின் ஒரு கட்டத்துக்கு மேல் இல்லாமல் போகிறது. ஹீரோ வில்லனைத் தீர்த்துக்கட்டும் காட்சிகளில் நம்பகத்தன்மையும் இல்லை சுவாரஸ்யமும் இல்லை.
இந்த சாதாரண பழிவாங்கல் கதையில் பெண்களுக்கு எதிரான வன்முறை, நல்ல தந்தையர்களின் தேவை என்ற விஷயங்களை புகுத்தும் அட்லியின் முனைப்பு பாராட்டத்தக்கதுதான் என்றாலும் அவை மேம்போக்காக குறிப்பாக வசனங்களில் மட்டுமே கையாளப்பட்டுள்ளன. பிரச்சனைகளின் ஆழத்தை, மூலக் காரணத்தைத் தொடும் நோக்கம் துளிக்கூட இருப்பதாகத் தெரியவில்லை.
அதேபோல் என்னதான் சூப்பர்ஸ்டார் படமாக இருந்தாலும் அவர் வில்லனை வீழ்த்துவது இத்தனை சுலபமாக நடப்பதைக் ஏற்க முடியவில்லை. இதனால் வில்லன் பாத்திரத்தின் வலிமை பாதிக்கப்படுவதோடு நாயகனுக்கு வலுவான எதிர்ப்பே இல்லை என்றாகி சுவாரஸ்யமும் போய்விடுகிறது.
அளவுக்கதிகமான செண்டிமெண்ட் காட்சிகள் ஒரு கட்டத்துக்கு மேல் திகட்டத் தொடங்குகின்றன. கட்டடத்திலிருந்து விழுந்து இறந்துபோன அம்மாவுக்கு அருகில் நின்று குழந்தை அழும் காட்சி இதற்கு ஒரு உதாரணம்.
150 நிமிடங்களுக்கு மேல் ஓடும் படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.
முடிவாக, விஜய்யும்-அட்லியும் நம்மை ஏமாற்றவில்லை. அவர்கள் மீது வைக்கப்பட்ட எதிர்பார்ப்புக்கு முழு நியாயம் செய்திருக்கிறார்கள். ஆனால் முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாதியிலும் இருந்திருந்தால் ‘தெறி’ இன்னும் சிறந்த பொழுதுபோக்குப் படமாக இருந்திருக்கும்.
Rating 3/5...!

Post a Comment

0 Comments