Ticker

6/recent/ticker-posts

Irandam Ulagaporin Kadaisi Gundu Review

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம் :


கதை :

இரண்டாம் உலகப்போரின் பின் அழிப்பதற்காக கடலில் கொட்டப்பட்ட நிறைய குண்டுகளில் ஒன்று  கரை ஒதுங்குகிறது . அது எப்படி எப்படியோ பயணித்து காயலான் கடை பொருட்களை ஏற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் தினேஷின் லாரிக்கு வருகிறது . அந்த குண்டை தேடி வரும் போலீஸ் , அதன் பாதிப்புகள் மற்றும் பின்னால் உள்ள அரசியல் ஆகியவற்றை வெளிக் கொண்டு வர பின் தொடரும் பத்திரிகையாளர் &  தோழரான ரித்திவிக்கா, இதனிடையில் சாதி பாகுபாட்டால் வேறு திருமணம் செய்து வைக்க இருக்கும் நிலையில் குடும்பத்தை விட்டு வெளியேறி காதலன் தினேஷை தேடி வரும் ஆனந்தி, இவர்களுக்கு என்னானது ? குண்டு என்னானது என்பதே இந்த இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு !

கதாபாத்திரங்கள் :

சரியான கதைக்களம் மற்றும் கதாப்பாத்திரம் கிடைத்தால் தன் இயல்பான நடிப்பால் முத்திரை பதிப்பார் தினேஷ் என்பதற்கு இந்த படமும் உதாரணம் ( அட்டகத்தி , குக்கூ வரிசையில் ) . லாரி டிரைவராக யதார்த்தமான நடிப்பில் அசத்துகிறார் !

முதலாளியின் விசுவாசியாக , தினேஷ் உடன் துணைக்கு லாரியில் பயணிக்கும் முனிஷ் காந்த் பண்ணும் காமெடி அலப்பறைகள் அதகளம் !

ஆனந்திக்கு பரியேறும் பெருமாள் படத்தில் வந்த மாதிரி ஓர் கதாபாத்திரம் மிகையில்லாத நடிப்பு , பத்திரிக்கை எழுத்தராக, தோழராக வரும் ரித்திவிக்காவிற்கு நல்ல அழுத்தமான கதாபாத்திரம் நாயகியை விட, சிறப்பாக செய்துள்ளார் !

மற்ற கதாபாத்திரங்களும் நல்ல தேர்வு , குறிப்பாக காயலான் கடை முதலாளியாக வரும் மாரிமுத்து மற்றும் போலீஸ் அதிகாரி லிஜேஷ் !

தொழில் நுட்ப கலைஞர்கள் :

தொழில் நுட்ப கலைஞர்களில் முக்கியமாக கவனிக்க வைப்பவர்கள் கலை இயக்குனர் ராமலிங்கம் ( காயலான் கடை செட் ), இசையமைப்பாளர் தென்மா மற்றும் ஒளிப்பதிவாளர் கிஷோர் !

முதல் படத்திலே  சாதி , தொழிலாளி மற்றும் உழைப்பாளி பேதம் பற்றி பேசிய விதம் மற்றும் உலக அரசியலை எளிய மக்களின் வாழ்வின் மூலம் சொல்லிய விதத்தில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர் அதிரன் அதியன் !

குறைகள் :
சாதி , அரசியல், முதலாளித்துவம் எல்லா  விஷயங்களையும் தொட்ட இயக்குனர் , அதனை மேலோட்டமாக சொல்லிய விதம் , வசனங்களில் இல்லாத அழுத்தம் ,  குண்டு வெடித்தால் வரும் பாதிப்பை ஆவணப் படத்தின் மூலம் காட்டிய விதத்தில் ஏற்பட்ட  பதைபதைப்பு , குண்டுடன் பயணிக்கும் தினேஷ் மற்றும் முனீஸ்காந்த் காட்சிகளில் நமக்கு  கொண்டு வரவில்லை.

மொத்தத்தில் இந்த இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு :  உலக அரசியலை எளிய மக்களின் வாழ்வின் மூலம் சொல்ல வந்த முயற்சியில் வெற்றிபெற்றாலும் ,  இன்னும் அழுத்தமான வசனங்களால் மற்றும் குண்டு பற்றிய பதை பதைப்பு  காட்சிகளை நம்மில்  கடத்தி இருந்தால் இந்த குண்டு நன்றாக வெடித்து  இருக்கும் . (3.5/5).



Post a Comment

0 Comments